Skip to main content

1. செந்தித்துறை

சந்தம்

தத்தத்தன தத்தத் தனதன
    தத்தத்தன தத்தத் தனதன
        தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான

பாடல்

செந்தித்துறை கந்தப் பெருவன,
சங்குக்குதை சித்திச் செருகிட,
பந்தத்துணை சிதறிப் பிறகிட ...... வாழ்வேனே

பற்றிப்புரை சித்தன் குகபதி,
பாடிக்குறை வற்றித் தெளிவடை,
சுற்றம்பிரி வெட்டிப் புகலிட ...... அடைவேனே

பித்தன்இவன் பித்தன் இவனென,
முற்றும்இது தூற்றிச் சருக்கிட,
எள்ளல்நகை சத்தம் எழுந்திட ...... அயரேனே

மஞ்சம்படு சிக்கற் கூடிட,
தஞ்சம்கொடு அஞ்சல் கூறிட,
சற்றும்பிரி வல்லக் கூறிடு ...... முருகோனே

நட்டப்பிறை ஏற்கும் பித்தாமக,
தத்தத்தன தத்தத் தனென,
நல்லூர்உறை நட்டம் ஆடிடு ...... மயிலோனே

சொல் விளக்கம்

செந்தித்துறை கந்தப் பெருவன ...... திருச்செந்தூரில் நின்ற கந்தனின் பெருங்கடலில்

சங்குக்குதை சித்திச் செருகிட ...... கிடைக்கும் சங்கிலான குதை என் சிந்தையில் திருகி ஏறிட

பந்தத்துணை சிதறிப் பிறகிட வாழ்வேனே ...... பந்தபாசம் உதறி விலக நான் வாழ்வேனே

பற்றிப்புரை சித்தன் குகபதி ...... சித்தன் குகனின் அடியை பற்றி

பாடிக்குறை வற்றித் தெளிவடை ...... அவன் புகழ் பாடி என் குறையெல்லாம் வற்றி நான் தெளிவடைய வேண்டும்

சுற்றம்பிரி வெட்டிப் புகலிட அடைவேனே ...... சொந்தங்களை தவிர்த்து கந்தனிடம் அடைக்கலம் அடைவேனே

பித்தன்இவன் பித்தன் இவனென ...... என்னை பித்தன் என்று இகழும்

முற்றும்இது தூற்றிச் சருக்கிட ...... இந்த பித்து இன்னும் முற்றும் என ஊரார் தூற்ற

எள்ளல்நகை சத்தம் எழுந்திட அயரேனே ...... என்னை கண்டு சிரிக்கும் சத்தத்தை கேட்டு ஒருபோதும் அயர மாட்டேன்

மஞ்சம்படு சிக்கற் கூடிட ...... நோயுற்று உடலில் சிக்கல் கூடிட

தஞ்சம்கொடு அஞ்சல் கூறிட ...... திருவடிகளில் தஞ்சம் கொடுத்து ஆட்கொள் என நான் கூறிட

சற்றும்பிரி வல்லக் கூறிடு முருகோனே ...... சற்றும் என்னை விடாமல் உன்னிடமே வைத்துக் கொள்வேன் எனக் கூறிடு முருகா

நட்டப்பிறை ஏற்கும் பித்தாமக ...... பாதி பிறை சூடிய சிவனின் மகனே

தத்தத்தன தத்தத் தனென,
நல்லூர்உறை நட்டம் ஆடிடு மயிலோனே
...... திருவெண்ணெய்நல்லூரில் அருணகிரி பெருமாளுக்கு ஆடும் மயிலில் ஏறி காட்சியளித்த எங்கள் பெருமானே